ஸ்திரீயின் வாசனை (அ) பெண்ணின் மணம்

 • ​மதில்கள் (1965 – மலையாளம்)(வைக்கம் முகம்மது பஷீர்)

  பஷீர் – இங்கு அவரே கதை சொல்லி, அவரே கதையின் முன்னணி பாத்திரம், அவரது வாழ்வே இலக்கியத்தின் மூல கரு.

  மைய கதாபாத்திரம் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டமைக்காக பலமுறை சிறைச்சாலையின் காற்றை சுவாசித்து தன் நாசிகள் விரிய நுகர்ந்தவர், படைத்த இலக்கியங்களில் அரசாங்கத்திற்கு எதிராக இருந்தது என்றும், இவ்வாறு செய்தமை ராஜ துரோகம் என்றும் கூறி அவர் மீது வழக்கும் தொடுத்து வழக்கம்போல் சிறைச்சாலைக்கும் அனுப்பிவிட்டது. அவரை சிறைச்சாலையின் வார்டர் பதினேழு பேர் கொண்ட வளாகத்திற்கு அழைத்து செல்கிறார்.

  “அப்படியே நடக்கும்போது இந்த உலகத்திலுள்ளதில் மிகவும் வசீகரமான நறுமணம். ஸ்திரீயின் சுகந்தம். பெண்ணின் மணம்.”

  “பெண் என்ற அற்புதப் படைப்பை நான் மறந்திருந்தேன்….மறந்தே போயிருந்தேன்”

  “நான் சொல்வது சோப்பு வாசணையல்ல. வெட்டிவேரின் வாசணையோ, குளியற்பொடியின் வாசணையோ, எண்ணெயின் வாசணையோ அல்ல. பவுடரும் வியர்வையும் கலந்த வாசணையும் அல்ல. சாட்சாத் பெண்ணின் அற்புத சுகந்தம்.”

  அவர் அதைப் பற்றி வார்டரிடம் கேட்டார், முதலில் கேட்டவரை கேலிக்குள்ளாக்கிவிட்டு பதில் தருகிறார், அதாவது இந்த வளாகத்தின் இரண்டு பக்கமும் பெரிய மதில்கள் இருக்கின்றன அதில் ஒன்று வெளியுலகத்தயும் மற்றொன்று பெண் சிறைச்சாலையையும் அரணாக காக்கிறது என்று. அவரை ஒரு சிறையில் வைத்து பூட்டிவிட்டு தனது மற்ற சோலியை பார்க்க சென்று விட்டார்.
  “பிரபஞ்சமென்ற பெரும் சிறைக்குள்ளேயிருக்கும் சின்ன சிறையில் தனியாக நான். நானும் முடிவின்மையும்.”

  பஷீரின் வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக பார்க்கும் மனப்பான்மையினால் அவருக்கு புதிய நண்பர்களும் சீடர்களும் கிடைக்கப்பெற்றனர், பழைய நண்பர்கள் சிலரும் சிறைச்சாலையில் ஆயுள் மற்றும் தூக்கு தண்டனை கைதிகளாக வசித்து வருகின்றனர். அனியன் ஜெயிலருடன் சுவாரசியமாக நாய் வளர்ப்பை பற்றி உரையாடுவதிலும், ரோஜாத்தோட்டம் போடுவதிலும், அவற்றை பராமரிப்பதிலும், அவைகளுடன் சண்டையிடுவதிலும், தூக்கு தண்டனை கைதிகள் சிலருக்கு கடைசி ஆசையாக கடுஞ் சாயா குடிக்க வேண்டும் போது அதிகாலையில் எழுந்து தயார் செய்து கொடுப்பதும் என பஷீரின் நாட்கள் கழிந்தன.
  “அங்கே வாதப் பிரதிவாதங்களும் வெடிச்சிரிப்புமாக இருந்தது. மொத்தத்தில் ஒரு சின்ன டவுன் போல. பேச்சு, சிரிப்பு, ஆர்ப்பாட்டம். “

  “ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு செடியையும் நான் நேசிக்கிறேன். நான் பேசினால் மரங்களுக்கும் செடிகளுக்கும் புரியும் என்று கூட எனக்குத் தோன்றும்.” 

  இப்படியான நேரத்தில் அரசியல் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யப்போகிறார்கள் என்று அனியன் ஜெயிலர் அறிவிக்கிறார். எல்லோரும் குதூகலத்தின் உச்சியை தொட்டனர். ஆனால் பஷீருக்கு மட்டும் அது நீடிக்காதபடி உத்தரவு வரவில்லை. அவர் மட்டும் அந்த வளாகத்தில் தனித்து இருக்கும் படி நேரிட்டது.
  “சிரிப்பில்லை. சந்தோஷமில்லை. எதுவுமில்லை. மொத்தத்தில் மனதுக்குள் இரவும் பகலுமல்லாத நிலை.”

  “எனக்கு எதிலும் விருப்பமில்லை. வாழ்க்கையின் வெம்மையும் வெளிச்சமும் போய்விட்டன.”

  இதற்கிடையில் சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான உபகரணங்களையெல்லாம் சேகரித்து ஏற்ற நேரத்திற்க்காக காத்திருக்கிறார்.
  “காற்றும் மழையும் இடியும் உள்ள கோரமான இரவு வரட்டும்.”

  இத்தருணத்தில் பெண் சிறைச்சாலையில் இருந்து ஒரு குரல் ஒலிக்கிறது, பஷீருக்கும் அந்த நாரீமணிக்கும் இடையில் ஒரு வகையான நெருக்கம், அந்யோன்யம் ஏற்படுகிறது ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலே. அவர்களுக்கிடையே மேற்கூறிய உணர்வுகள் ஏற்பட்டதற்கு சான்றாக,

  “நான் கூப்பிட்டும் பின்னே ஏன் இத்தனை நேரம் கேக்காம இருந்தீங்க?

    நான் சொன்னேன், நான் முத்தம் குடுத்துகிட்டிருந்தேன்,

    மதிலையா?

     இல்லே

     அப்புறம்?

     ஒவ்வொரு ரோஜாப் பூவுக்கும். ஒவ்வொரு கிளைக்கும். ஒவ்வொரு துளிருக்கும்.

  நாராயணி சொன்னாள், கடவுளே எனக்கு அழுகை வருது.”


  “நாராயணி சொன்னாள், எப்பவும் மதிலுக்கு மேலே பாருங்க, நான் வர்றப்போ ஒரு காஞ்ச கம்ப மதிலுக்கு மேலே வீசுவேன். பார்த்ததும் வருவீங்க இல்லையா ?”
  “நாராயணி சொன்னாள், கம்பை வீசி வீசிக் கையோட முட்டியே பேந்து போச்சு.

   நான் சொன்னேன், நான் தடவி சரி பண்ணிடறேன்.

    அவள் சொன்னாள், இந்தாங்க கை. தடவி சரி பண்ணுங்க. நான் மதிலோட சேர்த்து வச்சிருக்கேன்.

  நான் சொன்னேன், நான் மதிலத் தடவுறேன். முத்தம் கொடுக்குறேன்.

  அவள் சொன்னாள், நான் மதிலோட மாரை சேத்து வெச்சு இறுக்கமா முத்தம் கொடுக்குறேன்.

  அவர்கள் இருவரும் ஒருநாள் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். ஆனால் அந்த தருணத்தில் பஷீர் விடுதலை செய்யப்படுகிறார்.

  “நாடக பாணியில் சொன்னார் அனியன் ஜெயிலர், You Can go Mr.. You are free !

  Why should I be free ? Who wants freedom ? “

  இதற்கடுத்தாற் போல் அவர் சிறைச்சாலையை விட்டு வெளியேற்றப்படுகிறார்.

  “நான் தனியானேன். நறுமணம் பரப்பும் சிவப்பு ரோஜாவை கையில் வைத்து பார்த்து கொண்டு நான் அந்தப் பெரும் பாதையில் அசைவில்லாதவனாக நீண்ட நேரம் நின்றேன்.”

  “மங்களம். சர்வ மங்களம்.”

    என்ற வாக்கியத்தோடு இந்த படைப்பு தாள்களில் முற்றுப்பெருகிறது, ஆனால் வாசகனின் உள்ளம் இந்த  முற்றுப் பெறாத காமத்தின் பாரத்தை என்றும் சுமந்து கொண்டே இருக்கும்.

  வாழ்க்கையின் கொண்டாட்டம் இந்த குறுநாவல்.

  ஆண்-பெண் இரு மனங்களின் / உணர்வுகளின் உச்சத்தை மிகவும் குறைந்த பக்கங்களில் எட்ட முடிந்திருக்கிறது.

  பல இயல்பான விடயங்களை கூட நகைச்சுவையாக, ரசிக்கும்படியாக இப்புதினம் முழுதும் விரவி இருக்கிறார்.

  இது ஒரு மொழிபெயர்ப்பு புதினம் என்றே தோன்றாதவாறு கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்த்துள்ளார். (மூல மொழி – மலையாளம்)

  குறை என்று இருவரின் உரையாடலின் பொழுது முதல் இரண்டு இடத்தில் யார் கூறுகிறார்கள் என்று கூறி விட்டு பின் வருவன வற்றில் அவ்வாறு குறிப்பிடாமல் செல்ல வேண்டும். (அவள் சொன்னாள், நான் சொன்னேன் என்று வரிக்கு வரி வருகிறது) இது மூலத்தில் உள்ள பிழையா அல்லது மொழிபெயர்ப்பிலா என்று தெரியவில்லை.

  கடைசியாக நமது உள்ளமும் நாராயணிக்காக ஏங்கும்!!! 

        ஆ. கு –

  * வைக்கம் முகம்மது பஷீர் (1908 – 1994)

  * இவர் மலையாள நவீன இலக்கியத்தில் மிக அதிகம் சிலாகிக்கபட்டவர் மற்றும் விமர்சிக்கப்பட்டவர்.

  * இவர் தனக்கு சொந்தமில்லாத ஓர் அனுபவத்தையோ ஒரு வரியையோ அவர் எழுதவில்லை. இது அவரது தனி அடையாளமாக கருதப்படுகிறது .

  * இவரது படைப்புகள் இந்தியாவின் முக்கியமான எல்லா மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம், பிரஞ்சு, மலாய், சைனீஸ், ஜப்பானிய மொழிகளிலும் வெளிவந்திருக்கிஉள்ளமும். கு 

  இந்த குறுநாவல் 1990 இல் அதே பெயரில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்மூட்டியின் நடிப்பில் மூலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.